டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு!

Share this News:

புதுடெல்லி (03 மே 2020): டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஜபருல் இஸ்லாம் கான் சமூக வலைதளத்தில் பதிந்த பதிவு மத உணர்வுகளை தூண்டுவதாக அமைந்ததாகக் கூறி வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஜபருல் இஸ்லாம் கான் மீது போலீசில் புகார் அளித்தார்.

அதில் இரு சமூத்தினரின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில், பகைமை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு ஒரு கருத்தை ஜபருல் இஸ்லாம் பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இவ்வழக்கு டெல்லி சிறப்பு போலீசாரின் சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் ஜபருல் கான் மீது கடந்த மாதம் 30-ம் தேதி ஐ.பி.சி. பிரிவு 124(ஏ), 153(ஏ) ஆகிய இரு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை சைபர் பிரிவு விசாரித்து வருகிறது. இவ்வாறு டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறிப்பிட்ட பதிவை நீக்கிய ஜபருல் இஸ்லாம் கான், அதற்காக மன்னிப்பும் கோரியிருந்தார். மேலும் மன்னிப்பு கோரிய பதிவில், நாடு கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி வரும் போது, மருத்துவ அவசர நிலையில் இருக்கும் போது இது போன்ற கருத்துகளைத் தெரிவித்திருக்கக் கூடாது. என் கருத்துகளால் யாரேனும் மனது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

எனினும் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share this News: