ஜான்பூர் (07 மே 2020): கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உத்திர பிரதேச தப்லீக் ஜமாஅத் மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் பரவல் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்த வேலையில் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தப்லீக் ஜமாஅத்தினர்தான் கொரோனாவை பரப்பியதாக ஊடகங்கள் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியது. அதேவேளை தப்லீக் ஜமாத்தினர் சிலருக்கு கொரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் தப்லீக் ஜமாஅத் மூத்த தலைவர் நஸீம் அஹமது, டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் கலந்து கொள்ள இந்தியா வந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினருக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி உ.பி போலீஸ் வழக்கு பதிவு செய்தது. மேலும் நஸீம் உபி போலீசாராம் ஏப்ரல் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டு தனிமை படுத்தப்பட்டார்.
மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் கொரோனா இல்லை என உறுதியானது. தனிமைப்படுத்தப்பட்டிருந்த நஸீம் ஏப்ரல் 17 ஆம் தேதி தற்காலிக சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு ஒருவாரம் கழித்து உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் ஜான்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் இதய நோய் பாதிப்பால் புதனன்று உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நசீம் அஹமதுக்கு வயது 65..
இதற்கிடையே தப்லீக் ஜமாத்தினர் பலரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவர்களது பிளாஸ்மாவை தானமாக கொடுக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.