புதுடெல்லி (06 டிச 2022): இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தில் நம்பிக்கை கொள்ள உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது
சத்சங்க நிறுவனரும், இந்து ஆன்மிக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ தாகூர் அனுகுல் சந்திராவை பரமாத்மாவாக அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் ஒரு தனி மனிதரின் புகழுக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது என மதிப்பிட்ட நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
மேலும் மனுதாரர் சார்பாக வாதாடிய உபேந்திர நாத் தலாய் க்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தில் நம்பிக்கை கொள்ள உரிமை உண்டு. எந்த மதத்தை நம்ப வேண்டும் என்று எப்படி சொல்ல முடியும்? நீங்கள் அவரை உச்சமாக நினைக்கலாம். அதை ஏன் மற்றவர்கள் மீது திணிக்க வேண்டும்? இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இது பொதுநல மனு அல்ல, என்றும் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.