புதுதில்லி (10 அக் 2020):நமது நாட்டில் அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒன்றாக பேச்சுச் சுதந்தரம் இருக்கலாம் என உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் ஆரம்பித்த வேளையில, புதுதில்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டுடன் கொரோனாவை தொடர்புபடுத்தி ஊடகங்களில் அவதூறு செய்தி வெளியானது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தில்லியில் நடைபெற்ற மாநாட்டை கொரோனா பாதிப்புக்கான களம் என்று சித்தரித்து, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுகின்றனர். இதில், தவறான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, இதில் மோசமான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை எனவும் இந்த வழக்கு பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இருப்பதாகவும் பதிலளித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் முழுமையான தகவல் இல்லை என கண்டனம் தெரிவித்தார்.
மேலும் எதிர்தரப்பினர் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்றால் அதை நிரூபிக்கும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தினார். முறையான விளக்கத்தை அளிக்காமல் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக மத்திய அரசு கருத்து சுந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
மேலும் இந்த வழக்கில் மீண்டும் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இதில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் இந்தமுறை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளரும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.