அஹமதாபாத் (23 செப் 2020): குஜராத்தில் 81 வருட பாரம்பரிய தமிழ் பள்ளி மூடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குஜராத் அஹமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளியை மூட குஜராத் அரசு உத்தரவிட்டு கெடு விதித்துள்ளது. பள்ளியை மூட வேண்டாம் என்று மாவட்ட கல்வி அலுவலர் வரை சந்தித்துவிட்டனர் குஜராத் வாழ் தமிழ் மக்கள். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை,.
இந்த பள்ளியில் படித்த ஏராளமானோர் பல்வேறு அரசுத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறி பள்ளியை மூட பள்ளி நிர்வாகமும் மாவட்டக்கல்வி நிர்வாகமும் முடிவெடுத்து அறிவிப்பும் செய்துள்ளனர்.
ஆனால் தமிழ் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களான தமிழர்களும் பள்ளியை மூடக்கூடாது. பள்ளியை மூடினால் படிப்பு வீணாகும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி கல்வி அமைச்சர் வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் குஜராத் வாழ் தமிழர்களின் கோரிக்கையை அரசும் அதிகாரிகளும் ஏற்றதாக தெரியவில்லை.
அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் மாணவர்கள் பள்ளியில் மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்தான் மாற்றுச் சான்றிதழ் பெறமுடியும் என்று நோட்டிஸ் ஒட்டியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதுடன் தமிழ்ப்பள்ளி மூடுவதை தடுக்க குஜராத் வாழ் தமிழர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் அழைப்பு கொடுத்துள்ளனர்.