பஷீர் அஹமது பாபா – 12 வருட சிறைவாசத்திற்குப் பிறகு குற்றமற்றவர் என விடுதலை!

Share this News:

சூரத் (30 ஜூன் 2021): தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான பஷீர் அஹமது பாபா, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றமற்றவர் என தீர்ப்பு அளிக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

காஷ்மீர் நாட்டைச் சேர்ந்த பஷீர் அகமது பாபா, குஜராத்தில் தீவிரவாத குழுவிற்கு இளைஞர்களை சேர்க்கிறார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது.

ஸ்ரீநகரைப் பூர்வீகமாகக் கொண்ட பஷீர் அகமது பாபா, கடந்த 2010 ஆம் ஆண்டில்  கணினி வேலைக்காக ஒரு நண்பருடன் குஜராத்திற்கு வந்தார். அகமதாபாத்தில் உள்ள ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்த இவரை, பயங்கரவாத தடுப்புப் படை (ஏ.டி.எஸ்) கைது செய்தது.

இதுபற்றி பஷீரின் நண்பர் கூறுகையில்…

“ஏ.டி.எஸ் கைது செய்யப்பட்ட பின்னர் சுமார் இரண்டு வாரங்கள் விசாரணை நடைபெற்றது. என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்றும் அவரிடம் கூறப் படவில்லை. இதனிடையே விசாரணைக்குப் பிறகு பஷீர் அஹமது பாபா வதோதரா சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால் எந்த தவறும் செய்யவில்லை என்பதில் பஷீர் அஹமது உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருந்தார். ஊடகங்களும் பஷீர் அஹமதுக்கு எதிராக கண்டபடி எழுதின.

அப்பாவி பஷீர் அகமதுவுக்காக அவரது குடும்பத்தினர் நடத்திய நீண்ட சட்டப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. எனினும் இந்த வழக்கு பஷீர் குடும்பத்தை மனரீதியாகவும், நிதி ரீதியாகவும் மிகவும் பாதிப்படையச் செய்திருக்கின்றது!”

தி வயர் இணையதளம் பஷீரிடம் நேர்காணல் நடத்தியிருக்கிறது.

“காஷ்மீரில் இருந்து இளைஞர்கள் காவல்துறையினரால் கடத்தப்பட்டதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை நானே அனுபவிப்பேன் என்று என்று எதிர்பார்க்கவில்லை!” என்று தி வயர் இணையதளத்திடம் பஷீர் கூறினார்.

மேலும் இழந்த வாழ்க்கையைக் குறித்து தனக்கு  எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லை என்று கூறிய பஷீர் அகமது, இது அல்லாஹ்விடமிருந்து வந்த சோதனை என்றும் கூறினார்.

சிறைவாசத்தின் போது, ​​பஷீர் தொடர்ச்சியாக படித்து மூன்று முதுகலை பட்டங்களை பெற்றது குறிப்பிடத் தக்கது.


Share this News:

Leave a Reply