புதுடெல்லி (09 ஜூன் 2020): ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகளை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 29 வயதான விகாஸ் குமார் மற்றும் 22 வயதான சிமன் லால் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைதான இருவரில் விகாஸ் குமார் ராஜஸ்தானில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் முழுநேர பணியாளராகவும், சிமன் லால் பிகானீரில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் மையத்தில் ஒப்பந்த பணியாளராகவும் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது
மேலும் பாகிஸ்தானின் முல்தானில் இருந்து இயங்கும் அனோஷ்கா சோப்ரா என்ற பேஸ்புக் சுயவிவரத்தைப் பயன்படுத்தி வந்த ஒரு பாகிஸ்தான் புலனாய்வு செயல்பாட்டாளர் விகாஸ் குமாருடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது.
விகாஸ் குமாரின் நடவடிக்கைகள் லக்னோ ராணுவ புலனாய்வு மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத எதிர்ப்புப்படையின் கூட்டுக் குழுவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு ‘பாலைவன வேட்டை’ என்று பெயரிடப்பட்டது.
ராஜஸ்தான் போலிஸ் புலனாய்வு மற்றும் ராணுவ உளவுத்துறை லக்னோவின் கூட்டுக் குழுவும் அமைக்கப்பட்டு, அனைத்து கண்டுபிடிப்புகளும் மீண்டும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. மேலும் விவரங்கள் பெறப்பட்டு உறுதியான சான்றுகள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் இருவரும் இறுதியாக திங்களன்று கைது செய்யப்பட்டனர்.