புதுடெல்லி (23 ஜூன் 2021): எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸே காரணம் என்று ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “காங்கிரஸ் ஆட்சியின்போது, எண்ணெய் பத்திரங்களில் இருந்த பல கோடி ரூபாய்கள் திருப்பிச் செலுத்தப் படவில்லை. இப்போது நாங்கள் அந்தத் தொகையினை, முதல் மற்றும் வட்டியுடன் சேர்த்து செலுத்துகிறோம்.
ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
அதுதான் பெட்ரோல் விலை பெருமளவில் அதிகரிக்க வழிவகுத்தது. அதுமட்டுமல்லாமல் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் சுமார் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு இதுவும் காரணம்!” என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் ANI க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி நேற்று முன்தினம் எரிபொருள் விலையை உயர்த்தியதற்காக ஒன்றிய அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.