லடாக் (13 ஜூன் 2020): இந்திய சீன படையினர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
சிக்கிமில் இந்திய மற்றும் சீன படை வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டதட்ட ஐந்து நிமிடம் ஓடும் அந்த வீடியோ காட்சிகளில், பனியால் சூழப்பட்ட அந்த மலைப்பகுதியில் இந்தியா – சீனா வீரர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். திரும்பி செல்லுங்கள், சண்டையிட வேண்டாம் என்று இரு தரப்பிலிருந்தும் வீரர்கள் கூச்சலிடுகின்றனர். எனினும், ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படுகிறது.
இப்படி, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்டிருந்த நிலையில், இந்திய வீரர்களால் தாக்கப்பட்ட ஒரு சீன வீரருக்கு எதுவும் ஆகவில்லையே என இந்திய அதிகாரி கேட்கிறார். எனினும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்றும், எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
லடாக் பகுதியில் இந்திய – சீன படைகள் இடையே மோதல் நடந்து சில நாட்களிலேயே சிக்கிம் பகுதியில் இந்திய சீன படைகளுக்கிடையேயான மோதல் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.