புதுடெல்லி (11 ஜூன் 2020): மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் பயனாளிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சி.ஜி.எச்.எஸ். என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் கவர்னர்கள் மற்றும் துணை கவர்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், முன்னாள் துணை ஜனாதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளின் இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள், டெல்லி போலீசார், இரயில்வே வாரிய பணியாளர்கள் உள்ளிட்டோர் பலன் பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் பல மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த மருத்துவமனைகள் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக தனியார் மருத்துமனைகளில் பயனாளிகள் சிரமங்களை சந்திப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், சி.ஜி.எச்.எஸ். திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகள் அனைத்தும் பயனாளிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.