மும்பை (04 நவ 2020): அர்னாப் கோஸ்வாமி கைது செய்ய வழிவகுத்த தற்கொலை வழக்குக்கும் மும்பை காவல்துறையின் கீழ் பதிவாகியுள்ள டிஆர்பி வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
ரிபப்ளிக் டிவி உரிமையாளரும் தலைமை செய்தியாளருமான அர்னாப் கோஸ்வாமி புதன் கிழமை காலை மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதன் பின்னணியில் 2018 ல் தற்கொலை வழக்குதான் காரணம் என கூறப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் குமுத் நாயக் ஆகியோர் அலிபாக்கில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர். மரணத்திற்கான காரணம் தற்கொலை என்பதாக கூறப்பட்டது.
அன்வாய் ஆங்கிலத்தில் எழுதிய தற்கொலைக் குறிப்பில் , அன்வாய் மூன்று நிறுவனங்களிடமிருந்து தனக்கு பணம் கிடைக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறியிருந்தார்.. அதில் அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் சைக் (ஸ்கைமீடியா) மற்றும் நிதேஷ் சர்தா (ஸ்மார்ட்வொர்க்ஸ்) ஆகியோர் அன்வாய்க்கு பணம் கொடுக்கவேண்டி இருந்ததாக தற்கொலைக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அர்னாப் குற்றச்சாட்டுகளை மறுத்து, ஏற்கனவே பணத்தை செலுத்தியதாக கூறினார்.
அர்னாப் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த ஆதாரமும் இல்லாததால் ராய்காட் போலீசார் 2019 ஏப்ரலில் வழக்கை முடித்தனர். ஆனால் 2020 மே மாதம் அன்வாவின் மகள் அட்னியா மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரை அணுகி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரினார். அட்னியாவின் புகார் குறித்து சிஐடி விசாரணைக்கு மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து ராய்காட் போலீசாரால் மூடப்பட்ட இந்த வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியுடன் மீண்டும் தூசு தட்டப்பட்டது. இதனை தொடர்ந்தே அர்னாப் கைது செய்யப்பட்டுள்ளார்.
அர்னாப் பணத்தை திருப்பித் தந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எங்கே என்பதை போலீசார் இப்போது அர்னாபிடம் கேட்கிறார்கள். ஆனால் இதற்கும் மும்பை காவல்துறையின் கீழ் உள்ள டிஆர்பி வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
. டிஆர்பி மதிப்பீடுகள் தொடர்பான வழக்கை மும்பை போலீசார் விசாரிக்கின்றனர். டி.ஆர்.பி முறைகேடுகளுக்கு குடியரசு சேனல் உட்பட ஐந்து சேனல்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது.