ஜெனிவா (20 மார்ச் 2021): உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 139ஆவது இடத்தை பிடித்து மிக மோசமான நிலையில் உள்ளது.
சர்வதேச அளவில் எந்த நாட்டில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறித்த பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஐரோப்பிய நாடான பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாகப் பின்லாந்து முதல் இடத்தைப் பிடிப்பது குறிப்பிடத்தக்கது. பின்லாந்தைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
149 நாடுகளை உள்ளடக்கிய இந்தப் பட்டியலில் இந்தியா 139ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா 140ஆவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 105ஆவது இடத்தையும், வங்கதேசம் 101ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோல இலங்கை 129ஆவது இடத்தையும் சீனா 84ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. அமெரிக்கா இந்தப் பட்டியல் 19ஆவது இடத்தையே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.