ஆன்லைன் சூதாட்டம், மது – கத்தாரில் பலர் கைது! (வீடியோ)

ஆன்லைன் சூதாட்டம் நடத்தியதில் கைது!
Share this News:

தோஹா, கத்தார் (10 டிசம்பர் 2023): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா-வில், ஆன்லைன் சூதாட்டம், மது, மற்றும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்களை இரவோடு இரவாகக் கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

தோஹாவில் சில இடங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), நேற்று நள்ளிரவில் திடீர் சோதனைகள் நடத்தியது.

அதிரடி சோதனை

இச் சோதனையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆண்களும் பெண்களுமாக ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கத்தார் புலன் விசாரணைத் துறை வெளியிட்டுள்ள வீடியோ கீழே:

சந்தேகப்படும்படியான வீடுகளில் திடீர் சோதனை நடத்தியதில், சூதாட்டத்தில் ஈடுபட்ட கருவிகள், ஏராளமான பணம் மற்றும் மதுபானங்கள் கைப்பற்றப் பட்டன. (இந்நேரம்.காம்)

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு, தற்போது கூடுதல் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்களும் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

சட்டவிரோதம்

கத்தாரில் ஆன்லைன் சூதாட்டம், சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. இத்துடன் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை, மது பானங்கள் விற்பனை ஆகியவை இணைந்துள்ளதால், இவ்வழக்கில் ஈடுபட்டோருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

– நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)


Share this News: