தோஹா-திருச்சி நேரடி விமானச்சேவை – பயணிகள் மகிழ்ச்சி!

Share this News:

தோஹா (12 பிப்ரவரி 2020): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானச் சேவையின்றி இதுநாள் வரை பெரும் அவதியில் இருந்த பயணிகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பட்ஜெட் விமானம், தோஹா-திருச்சி வழித்தடத்தில் தனது புதிய சேவையைத் துவக்கி இருக்கிறது.

தோஹாவிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானச் சேவை இல்லாத காரணத்தால் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். இவர்கள் முறையே, தோஹா – சென்னை, தோஹா – கொச்சி அல்லது தோஹா – இலங்கை ஆகிய விமான வழித் தடங்களையே நாடி இருந்தனர். இதனால் பயண நேரமும் உள்ளூர் வாகனச் செலவுகளும் கூடுதல் சுமையாக இருந்து வந்தன.

எதிர் வரும் மார்ச் 31 முதல் இந்த சேவை துவங்க இருக்கிறது. செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆக மொத்தம் வாரத்திற்கு மூன்று நாட்கள் தோஹா – திருச்சி நேரடி விமானச் சேவை இருக்கும். இதனை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (இந்நேரம்.காம்)

திருச்சியிலிருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்படும் விமானம் IX 673 , கத்தர் நேரம் விடிகாலை 3.40 மணிக்கு வந்தடையும். அதே போன்று,  தோஹாவிலிருந்து விடிகாலை 4.40 மணிக்கு புறப்படும் விமானம் IX 674 , திருச்சி நேரம் காலை 11.55 மணிக்கு வந்தடையும்.

இது தோஹா வாழ் தமிழர்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share this News:

Leave a Reply