சவூதியிலிருந்து 152 பயணிகளுடன் முதல் விமானம் இந்தியா புறப்பட்டது!

Share this News:

ரியாத் (08 மே 2020): சவூதி அரேபியாவிலிருந்து 152 பயணிகளை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு புறப்பட்டது.

கொரோனா பரவல் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக நேற்று அபுதாபியிலிருந்து முதல் விமானம் இந்தியா புறப்பட்டது. நேற்று மாலை இரண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 354 பயணிகளுடன் கேரள மாநிலம் கொச்சி சென்றடைந்தது.

இந்நிலையில் இன்று பகல் 12:45 மணிக்கு ரியாத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் 152 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்டது.

இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரி தெரிவிக்கையில், “இதுவரை 60,000 இந்தியர்கள் ஆன்லைன் மூலம் இந்தியா செல்வதற்கு பதிவு செய்துள்ளனர். இந்தியா செல்லவுள்ளவர்களில் கர்ப்பிணிகள், உடல் நலக்குறைவு உள்ளவர்கள், வேலையிழந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

மேலும் சவூதியில் வசிக்கும் இந்தியர்கள் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சவூதி அரசின் சட்டதிட்டங்களை மதித்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Share this News: