கத்தார் (20 ஜன 2020): புதுப்புது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் முன்னணி நாடாகத் திகழும் (தோஹா) கத்தாரில், மிதக்கும் ஹோட்டல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் சர்வதேச 2022 FIFA விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, பல்வேறு கட்டுமானப் பணிகளையும் புதிய விரிவாக்கப் பணிகளையும் நாடு முழுக்க துரிதமாகச் செய்து வருகிறது கத்தார்.
அதன் ஒரு அங்கமாக, கத்தாரின் கெடைஃபேன் தீவில் 1,616 அறைகளைக் கொண்ட பிரம்மாணமான மிதக்கும் ஹோட்டல்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. கத்தாரா நிறுவனம் இதற்கான உரிமையைப் பெறுகிறது.
கடந்த 2017 ஜுன் மாதத்தில் அண்டை நாடுகளான சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரத்துடன் உள்ள உறவில் கத்தாருக்கு விரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு, கத்தாரின் தரை வழிப் போக்குவரத்தைத் துண்டித்ததுடன், வான்வழிப் போக்குவரத்திற்கும் தடை விதித்தன அண்டை நாடுகள்.
இத்தகைய கடுமையான நெருக்கடி சூழலிலும், துவண்டு விடாமல், உணவு, பால் உற்பத்தி, தற்சார்பு விவசாயம், தொழிற்சாலைகள், சர்வதேச கட்டுமானப் பணிகள் என பல்வேறு நாட்டு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது கத்தார்.
அதில் ஒரு முத்திரையாக இந்த மிதக்கும் ஹோட்டல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன் மூலம் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை கத்தார் ஈர்த்துள்ளது குறிப்பிடத் தக்கது. (https://inneram.satyamargam.com/tamilnadu/floating-hotels-for-2020-fifa-world-cup)