ரியாத் (29 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுமாத இந்தியக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹசிம் மற்றும் அவரது மனைவி ஜார்யா, ஆறுமாத குழந்தை அர்வா, மகன்கள் அயன் மற்றும் அஃப்னான் மற்றும் ஹசிமின் மாமியார் நஜ்முன்னிசா ஆகியோர் சவூதியில் உம்ரா செய்துவிட்டு அல்கோபரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
ரியாத்தில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள அல் கசரா என்ற இடத்தில் ஹசிம் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு மாத குழந்தை அர்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஹசீமின் மாமியார் நஜ்முன்னிசா அல்-குவாயா பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஹசிம், அவரது மனைவி ஜார்யா மற்றும் மகன்கள் அயன் மற்றும் அஃப்னான் ஆகியோருக்கு பெரிய காயம் ஏற்படவில்லை.
ரியாத் கே.எம்.சி.சி நலன்புரி பிரிவு தலைவர் சித்திக் துவ்வூர், துணைத் தலைவர் மஹ்பூப் செரி வலபில் மற்றும் ஹரீஸ் குருவா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிந்தனர்.