ஜித்தா (19 ஜூன் 2020): உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்தியன் சோசியல் ஃபாரம் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
வெளிநாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் சமூக நல அமைப்பான இந்தியன் சோசியல் ஃபாரம் இரத்த நன்கொடையாளர்கள் குழு (ஐ.எஸ்.எஃப்) 5 ஆண்டுகளாக இரத்த தானத்தில் ஈடுபட்டுள்ளது.
மேலும் 2019 ஆம் ஆண்டில் ‘நன்கொடையாளர்கள் பூங்கா (Donor’s Park)’ ரத்த தானம் வழங்கும் குழு மற்றும் ஒரு குறிப்பிட்ட இரத்த தேவைகளின் அடிப்படையில் இரத்த தானம் செய்ய விரும்பும் ஒரு வாட்ஸ்அப் குழு ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இரத்த கொடையாளர்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கைகோர்த்து, இதுவரை 133 இரத்த தானங்கள் செய்துள்ளனர்.
தற்போதைய இரத்த தேவையை உணர்ந்து இரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக உலக இரத்த தான தினத்தில் 2020 ஜூன் 14, அன்று ஜித்தா இந்தியன் சோசியல் ஃபாரம் சார்பில் ஆன்லைன் ஜூம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஜித்தா இந்தியன் சோசியல் ஃபாரம் மத்திய குழுத் தலைவர் திரு. அஷ்ரப் மொராயூர் தலைமை தாங்கினார். இந்திய தூதரக பொதுத் தூதர் டாக்டர் முகமது அலீம் இந்நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். மன்றத்தின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து ஆதரவையும் தெரிவிப்பதாக அவர் உறுதிப்படுத்தினார்.
அல்ஃபஹத் சிறப்பு பொது சுகாதார மையத்தின் மேலாளர் டாக்டர் முஹம்மது அப்துல்லாஹ் அல் ஜஹ்ரானி, இரத்த தானத்தின் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் எடுத்துரைத்தார், இது நன்கொடையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் மிகவும் ஊக்கமளித்தது.
அல்-அபீர் மருத்துவ மையத்தின் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் ஜம்ஷித் அஹமது, திரு ஃபெரோஸ்கான் (இந்தியா ஃபாரம்), அப்துல் கனி, மற்றும் இந்திய வெளிநாட்டு சமூகங்களின் முக்கிய தலைவர்கள், இந்தியன் சோசியல் ஃபாரத்தின் சேவைகள் குறித்து பாராட்டி பேசினர்.
இந்தியன் சோசியல் ஃபாரம் பொதுச் செயலாளர் ஈ.எம். அப்துல்லா நன்றி தெரிவித்தார், ‘நன்கொடையாளர்கள் பூங்கா (Donor’s Park)’ ஒருங்கிணைப்பாளர் அல்-அமன் அகமது விருந்தினரை வரவேற்றார்.