சாலையில் ஸ்டண்ட் காட்டிய பைக் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

பைக் ஸ்டண்ட் வைரல் வீடியோ
Share this News:

தோஹா, கத்தார் (15 டிசம்பர் 2023):  கத்தார் நாட்டில் சாலைகளில் அனுமதியின்றி மோட்டார் பைக் ஸ்டண்ட் செய்து ஹீரோயிஸம் காட்டிய நபர் கைது செய்யப் பட்டார்.  அத்துடன், அவரது மோட்டார் பைக்கும் நசுக்கி அழிக்கப்பட்டது.

தனது உயிருக்கும், சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் செய்ததற்காக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைரல் வீடியோ:

கத்தாரில் கடந்த சில நாட்களாக சமூக வலைத் தளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆனது.

அந்த வீடியோவில், ஒரு நபர் படுவேகத்தில் தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டி ஸ்டண்ட் செய்திருந்தார். இவ்விஷயம், கத்தார் நாட்டின் காவல்துறையினருக்கு எட்டியது.

கைது செய்யப்பட்ட ஹீரோ:

இதனைத் தொடர்ந்து, கத்தார் காவல்துறையினரால் ஸ்டண்ட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் இதில் பயன்படுத்தப் பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப் பட்டது. அதனை கீழ்க்கண்ட வீடியோவில் காணலாம்.

கத்தார் நாட்டில், பொது சாலைகளில் முன் அனுமதியின்றி இவ்வாறு ஸ்டண்ட் செய்வது பெரும் குற்றமாகக் கருதப் படுகிறது. இதன் அடிப்படையில், பைக் ஓட்டுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. (இந்நேரம்.காம்)

ஸ்டண்ட் காட்டிய பைக் நசுக்கி அழிப்பு:

பிடிபட்ட மோட்டார் சைக்கிள், நசுக்கி அழிக்கப்பட்ட வீடியோவை, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இதுபோன்ற மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், கத்தார் ரியால்களில் QR 50,000 வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று போக்குவரத்து சட்டத்தில் விதிகள் உள்ளன.

பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இது போன்ற அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்க இயலாது என கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

 


Share this News: