ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மூத்த தலைவர் அஹமது இம்தியாஸ் சற்றுமுன் பகிர்ந்துகொண்ட இந்த வியப்பளிக்கும் செய்தி ஒளவையார் பாடிய வெண்பாவின் செய்தி வடிவம்.
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எதிர்வரும் முப்பெரும் விழாவுக்காக இந்தியப் பன்னாட்டுப் பள்ளியின் தாளாளர் முதல்வர் உள்ளிட்டோரை அழைக்க ஒரு குழு அப்பள்ளிக்குச் சென்றிருந்தது. அச்சமயம் பள்ளி முதல்வர் தெரிவித்த செய்தி, நம் குழுவினரைக் கலங்கடித்துள்ளது.
அதாவது மேல்நிலை (+2) படிக்கும் ஒரு மாணவனின் தந்தை அண்மையில் எதிர்பாரா விதமாக ரியாத்தில் இறந்துவிட்டார்.
இந்நிலையில் மாணவனின் பள்ளிக் கல்வியை முடிக்க இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அக்கல்வியை முடித்துவிட்டு ஊர் திரும்பலாம் என்று அம்மாணவனும் தாயாரும் எண்ணுகின்றனர்.
ஆயினும் எதிர்பாராத சூழலால் மாணவனால் தேர்வுக் கட்டணம் கட்ட இயலாமல் இன்னமும் தேர்வுக்கான அனுமதி அட்டையைப் பெறாமல் இருக்கின்றான்
. இச்செய்தியை முதல்வர் தெரிவித்த உடன் ரியாத் தமிழ்ச் சங்கக் குழுவினர் “அமைப்பின் சார்பில் இதனை நாங்கள் ஏற்றெடுத்து, மாணவன் தேர்வெழுத உதவுகிறோம் என்று மனிதாபிமான அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கட்டணச் சாளரம் (Cash counter) சென்று வரிசையில் நிற்கின்றனர். இவர்களுடைய முறை வந்ததும் விவரம் கூறி தொகையைக் கட்ட முற்படுகையில், காசாளர் ” உங்களுக்கு முன் போனாரே, அவர் இப்போது தான் இக்கட்டணத்தைச் செலுத்தி நகர்கின்றார்” என்று கூறியதில் இவர்களுக்கு மிகவும் வியப்பும் மகிழ்வும் அலையடிக்கிறது.
உடனடியாக ஓடோடிச் சென்று அந்த மனிதரை அணுகி “யார் நீங்கள், அந்தப் பையன் உங்களுக்குத் தெரிந்தவனா? உறவினரா?” என்றெல்லாம் கேட்க, அவரோ மிகத் தணிவாகவும் பணிவாகவும் “அதெல்லாம் இல்லை, அந்தப் பையன் வட இந்திய மாணவன். நான் தமிழன். இப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டதும், யாரும் அறியாமல் இறைவனுக்காக இந்த உதவியை, தர்மத்தை செய்துவிடலாம்” என்று வந்தேன்; உங்களுக்குத் தெரிந்துவிட்டது” என்று கூறிச் சென்றுள்ளார். மிகவும் நெகிழ்ச்சியாகி விட்டது.
யாரென்றே அறியாத ஒரு மாணவனுக்காக உதவும் அந்த உயர்ந்த உள்ளம் உண்மையில் எல்லோருக்கும் பெய்யும் மழைக்குக் காரணமாகிறது அல்லவா!.
வாழ்க மானுடம் என்று மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை!
-இப்னு ஹம்துன்