புதுடெல்லி (31 ஜன 2023): ஆர் எஸ் எஸ் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த மாதம் ஜனவரி 14ஆம் தேதி டெல்லியில் ஆர்எஸ்எஸ் உடனான கலந்துரையாடல் நடைபெற்றதாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு தவிர, ஜமியத்-உல்-உலமாயே ஹிந்த் மற்றும் தியோபந்தின் தாருல்-உலூம் அறிஞர்களும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் சார்பில் இந்திரேஷ் குமார், ராம் லால், கிருஷ்ண கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு முந்தைய நாள், அதாவது ஜனவரி 13, முஸ்லிம் தலைவர்கள் பத்திரிகையாளர் ஷாஹித் சித்திக் வீட்டில் கூடியிருந்தனர். இந்தக் கூட்டத்தில் டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, பத்திரிகையாளர் ஷாகித் சித்திக், ஹோட்டல் அதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் மூலம், ஆர்.எஸ்.எஸ்-க்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் இடையே உள்ள அவநம்பிக்கைகளை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று இந்த சந்திப்பை ஒப்புக்கொண்ட பத்திரிகையாளர் சித்திக், கூறியுள்ளார்.
மேலும் சித்திக் கூறுகையில்,” சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் திரு. பகவத்தை சந்தித்தோம், சமீபத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் தொடர்பாக ஆர் எஸ் எஸ் மூன்று முக்கிய தலைவர்களுடன் பேசினோம்,. இதன் மூலம் இருதரப்பினருக்கும் இடையே நட்புறவை அமைக்க விரும்புகிறோம்” என்றார்.