சர்வதேச குர்ஆன் மற்றும் பாங்கு (தொழுகைக்கு அழைப்பு) போட்டி – சவூதி அரேபியா அறிவிப்பு!

Share this News:

ரியாத் (05 ஜன 2023): சவூதி அரேபியா அறிவித்துள்ள சர்வதேச குர்ஆன் மற்றும் அதான் (முஸ்லிம்களின் தொழுகைக்கான அழைப்பு) போட்டியின் இரண்டாம் பதிப்பு ஆன்லைன் விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மிகப்பெரிய பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 12 மில்லியன் சவூதி ரியால் வரை பரிசாக வழங்கப்படவுள்ளன.

‘இணையாதளம் மூலம் போட்டி நடத்தப்படும்’ என்று சவூதி பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் (GEA) வாரியத்தின் தலைவரான அவரது மேன்மையான ஆலோசகர் துர்கி அலல்ஷிக் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டிகளுக்கு https://otrelkalam.com/  மூலம் உலகின் எங்கிருந்தும் மின்னணு முறையில் விண்ணப்பிக்கலாம். போட்டிக்கான பதிவு நேற்று புதன்கிழமை, ஜனவரி 4, இணையதளம் மூலம் தொடங்கியுள்ளது.

இந்த போட்டி நான்கு நிலைகளை உள்ளடக்கியது. முதலாவது கட்டம் இணையதளத்தில் பதிவுசெய்து, பின்பு ஆடியோ கிளிப்பை பதிவேற்றம் செய்து நடுவர் மன்றத்தின் மதிப்பீட்டிற்காக காத்திருக்க வேண்டும்.

நடுவர்களின் பரிந்துரைப்படி இது இரண்டாவது கட்டத்திற்கு முன்னேறலாம். அதில் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்கள் மூன்றாம் கட்டத்திற்குத் தகுதிபெறக்கூடிய புதிய ஆடியோ கிளிப்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

போட்டி நிலைகளுக்கு ஏற்ப மதிப்பீட்டு தரநிலைகள் உயரும். மூன்றாவது கட்டத்தில் உள்ள சிறந்த போட்டியாளர்கள் நான்காவது கட்டத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள், இதில் இறுதி தகுதிப் போட்டிகள் அடங்கும்,

அவர்களின் போட்டிகள் புனித ரமலான் மாதத்தில் MBC மற்றும் ஷாஹித் அப்ளிகேஷன்களில் காட்டப்படும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் பதிப்பு போட்டியில் 80 நாடுகளில் இருந்து 40,000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியின் மூலம், இஸ்லாத்தின் சகிப்புத்தன்மை, இஸ்லாமிய உலகின் கலாச்சாரங்களின் செழுமை மற்றும் பன்முகத்தன்மை மற்றும் புனித குர்ஆனை ஓதும் குரல் முறைகளையும் உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது.

மேலும் பிரார்த்தனை, படைப்பாற்றல் மற்றும் திறமையான நபர்களை கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்தல் ஆகியவை இந்த போட்டியின் முக்கிய நோக்கமாகும்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *