அகர்தலா (06 ஜன 2023): அடுத்த ஆண்டு அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் என அமித்ஷா கூறியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதே உள்துறை அமைச்சரின் பணி என்றும், கோயிலை திறப்பது குறித்து கோயில் அதிகாரிகள் பரிசீலிப்பார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
பாபர் மசூதி – ராமர் கோவில் குறித்த வழக்கில் 2019 நவம்பரில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் கோயிலுக்கு வழங்க வேண்டும் என்றும், மசூதி கட்ட அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5, 2020 அன்று கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். கடந்த நவம்பரில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் கட்டும் பணி பாதி முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார். கோவில் திறப்பது குறித்து அமித்ஷா அறிவித்தார்.
முக்கிய நாட்களில் ஐந்து லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்யலாம் என கோவில் கட்டுமான குழு தலைவர் தெரிவித்தார்.
புனித யாத்திரை மையம், அருங்காட்சியகம், காப்பகங்கள், ஆய்வு மையம், ஆடிட்டோரியம், தொழுவங்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கான அறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.