ரியாத், சவூதி (16 ஜனவரி 2024): ரியாத் அருகே 200 மீட்டர் உயரமுள்ள குன்றின்மீது ஹைடெக் ஸ்டேடியம் அமைக்கிறது சவூதி அரசு.
இந்த விளையாட்டு அரங்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வடிவமைப்பை சவுதி அரேபியா அரசு நேற்று திங்கள்கிழமை வெளியிட்டது.
சவூதி அரேபியா நாட்டில் எதிர்வரும் 2034 ஆண்டு உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டு நடைபெற உள்ளது. இதனைக் காண வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு பிராஜக்ட்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஹைடெக் ஸ்டேடியம் கட்டுமானத்தில் முக்கியமாகக் கருதப்படுவது 45,000 இருக்கைகள் கொண்ட 200 மீட்டர் உயரம் கொண்ட ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ள மிகப் பெரிய விளையாட்டு அரங்கம் ஆகும். இந்த ஸ்டேடியத்திற்கு இளவரசர் முகமது பின் சல்மான் ஸ்டேடியம் என்று பெயரிடப்பட உள்ளது. (இந்நேரம்.காம்)
சவூதியின் தலைநகரான ரியாத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இந்த அரங்கம் அமைக்கப் பட்டு வருகிறது.
ரியாதில் பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் விளையாட்டு மைதானங்களுடன் உருவாகி வரும் “கிடியா” நகரத் திட்டத்தின் (Qiddiya City project) மையப் பகுதியாக இந்த ஸ்டேடியத்தின் கட்டட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஸ்டேடியத்தில் அமைக்கப்படும் தானியங்கி கூரைகள் மற்றும் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் நீளமுள்ள மிகப் பெரிய திரைகளுடன் கூடிய LED சுவர் ஆகியவை, உலக ரசிகர்களுக்கு ஒரு உன்னத அனுபவத்தைத் தரும் என்று கிடியா முதலீட்டு நிறுவனம் (QIC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)