மக்கா (21 பிப் 2020): ‘ஸ்மார்ட் ஹஜ்’ (Smart Hajj) என்ற புதிய நடைமுறை 2021 ஹஜ் முதல் மேலும் கூடுதல் வசதிகளுடன் செயல்படுத்தப்படும் என்று சவூதி ஹஜ் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ‘ஸ்மார்ட் ஹஜ்’ (மொபைல் ஆப்) என்ற நடைமுறை ஏற்கனவே அறிமுகப் படுத்தப்பட்ட போதும், அதில் மேலும் கூடுதல் தொழில் நுட்பங்கள் இணைக்கப்படவுள்ளன. அதன் மூலம் இவ்வாண்டு பெரும்பாலான ஹஜ் யாத்ரீகர்கள் இலகுவாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள வசதியாக கூடுதல் வசதிகள் இந்த ஸ்மார்ட் ஹஜ் ஆப்பில் இணைக்கப் படவுள்ளன. இதன் மூலம் நாட்டிலிருந்து பயணம் மேற்கொள்வது முதல், நாட்டுக்கு திரும்பி செல்வது வரை ஹஜ் யாத்ரீகர்கள் இலகுவாக யாத்திரையை மேற்கொள்ள முடியும்.
குறிப்பாக காணாமல் போகும் முதியவர்களை இந்த நடைமுறை மூலம் இலகுவாக கண்டு பிடிக்க முடியும். ஹஜ்ஜின் முக்கிய பகுதியான மினாவில் இந்த நடைமுறை மேலும் உதவியாக இருக்கும் என்று ஹஜ், உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு சர்வதேச தொழில் நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் இந்த வசதி மேலும் இலகுவாக்கப் பட்டுள்ளதாக ஹஜ், உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.