ரியாத், சவூதி (26 ஜூலை 2024): புலம் பெயர்ந்து வசிக்கும் தமிழர்களுக்கான நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது புலம்பெயர் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை. இது ஏற்கப்பட்டு, தமிழர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. சவூதி நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்காக இதற்குரிய சிறப்பு முகாமை ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தி வருகிறது.
தமிழின் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் கால் நூற்றாண்டுகளாக சேவையாற்றி வரும் அமைப்பு ரியாத் தமிழ்ச் சங்கம். அயலகத் தமிழர்களுக்கான நலவாரியம் தேவை எனும் கோரிக்கையை ரியாத் தமிழ்ச் சங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளது.
கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு
இதனைத் தொடந்து, புலம்பெயர் தமிழர்களின் நலன்களுக்காக கடந்த 2022 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலவாரியம் அமைத்தது. அதன் நீட்சியாக அயலகத் தமிழர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மே 2024 இல் அயலகத் தமிழர் நலவாரியம் அறிமுகப்படுத்தி, முதல் மூன்று மாதங்களுக்கு அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 200 ரூ கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
களத்தில் இறங்கிய ரியாத் தமிழ்ச் சங்கம்
இது குறித்து ரியாத் தமிழ்ச் சங்கம் சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், இதுவரை ஓட்டுநர்களாக, தோட்டவேலை செய்பவர்களாகப் பணியாற்றும் நானூறுக்கும் மேற்பட்ட கடைநிலை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பித்துக் கொடுத்து உதவியுள்ளது. (இந்நேரம்.காம்)
மேலும் நேற்று (26.07.2024) சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நியூ செனையா பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து அதன் சுற்றுப் பகுதியில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு அயலகத் தமிழர் அடையாள அட்டை விண்ணப்பித்து கொடுத்து உதவியது.
இந்த முகாமில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் ஜாஃபர் சாதிக், செயற்குழு உறுப்பினர்கள் மாதவன், ஆரிப் அப்துல் சமத், ஜமால் சேட், வசீம் ராஜா, முஹம்மது யூசுப் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஹைதர் அலி அவர்களின் வழிகாட்டலில், செயற்குழு உறுப்பினர் கபீர் ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்தச் சிறப்பு முகாமை திறம்பட ஏற்பாடு செய்திருந்தார்.
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமூகச் சேவை அணி
தொடர்ந்து இது போன்ற சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யவும், சமூக வலைத்தளம் வாயிலாகத் தொடர்பு கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை விண்ணப்பித்துக் கொடுக்கும் பணியினையும் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமூகச் சேவை அணி தொடர்ந்து செய்து கொடுக்கும் என்றும் ரியாத் தமிழ்ச் சங்க சமுக சேவை அணியின் தலைவர் அகமது இம்தியாஸ் நமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
- நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)