தம்பி – சினிமா விமர்சனம்!

Share this News:

பாபநாசம் படத்தின் மூலம் பலரை திரும்பிப் பார்க்க வைத்த ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தம்பி.

ஹீரோ கார்த்தி கோவில் ஒரு திருடனாக சகல சகவாசங்களோடு வாழ்க்கையை ஜாலியாக கொண்டு போகிறார். ஒரு நாளை அவரை போலிஸ் துரத்த பின் வாழ்க்கையே மாறிப்போகிறது.

ஊட்டியில் பெரும் அரசியல் பிரமுகராக இருப்பவர் சத்யராஜ், அவருக்கு மனைவியாக நடிகை சீதா, அம்மாவாக சௌகார் ஜானகி, மகளாக ஜோதிகா என பிரபலங்கள் கூடி இருக்கிறார்கள்.

சத்யராஜின் மகன் சிறுவயதில் காணாமல் போக, 15 வருடங்கள் கழித்து கார்த்தியின் உருவில் மீண்டும் வீடு வந்து சேர ஒரே மகிழ்ச்சி தான். ஆனால் தம்பியை தொலைத்த சோகம் ஒரு பக்கம், மறுபக்கம் வந்துள்ள தம்பியை கொண்டாடமுடியாமல் திணறுகிறது அக்காவின் நெஞ்சம்.

இந்நிலையில் மலைவாசி மக்களுக்கு ஒரு பிரச்சனை. வேறென்ன கார்ப்பொரேட் நிறுவனத்தினால் மக்கள் வாழ்க்கைக்கு கேள்விக்குறி என்பது தான். அந்த மலை மக்கள் நிலத்தில் என்ன இருக்கிறது ஒரு பக்கம் இருக்க அவர்களுக்காக போராடும் சத்யராஜ்க்கு பெரும் பிரச்சனை வருகிறது. கார்த்தியின் உயிருக்கும் கொலை ஆபத்து வருகிறது.

சத்யராஜின் மகன் காணாமல் போன பின்ன என்ன? உண்மையில் என்ன நடந்தது? தம்பி கார்த்தியை கொலை செய்ய துணிந்தது யார்? என்பதே இந்த தம்பியின் கதை.

கைதி படத்தால் கார்த்தியின் மீதான நம்பிக்கை மக்களிடத்தில் இன்னும் அதிகரித்துவிட்டது. அதே நம்பிக்கையுடன் தற்போது பலரின் கண்கள் தம்பி மீது திரும்பியுள்ளது. கார்த்திக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றே சொல்லலாம். திருடனாகவும் ஒரு மகனாகவும் அவரின் நடிப்பு பார்ப்பவர்களுக்கு இண்ட்ரஸ்டிங். ஆனால் அவருக்கான முக்கியத்துவம் குறைகிறதோ என தோன்றும் போது அங்கங்கே சுவாரசியம் கூட்டுகிறார் இயக்குனர்.

ஒரு தைரியமானப் பெண்ணாக ராட்சஸி படத்தில் ஜோதிகாவை பார்த்திருப்போம். தற்போது கண்டிப்புடன், பாசமும், ஏக்கமும் நிறைந்த அக்காவாக ரோல் செய்துள்ளார். அவரின் கோபம், பெரும் அமைதியின் பின்னணி கடைசியில் மட்டும்தான் தெரியும் என்ற வகையில் நடித்துள்ளார்.

கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல். தன் காதலனை பல வருடங்கள் கழித்துப் பார்த்த அதிர்ச்சியில் தொண்டை அடைத்தது போல இருக்கிறார் காதல் ரசம் உருகி வழிய.

சீதா அமைதியான அம்மா, மகன் காணாமல் போன ஏக்கம் ஒரு பக்கம் மகள் ஜோதிகாவை அமைதிப்படுத்த முடியாத தாயாக தடுமாறும் சூழ்நிலை மறுபக்கம் என பொறுமை காட்டுகிறார்.

சத்யராஜ் வழக்கம் போல அனுபவம் வாய்ந்த திறமையாக நடிப்பை கொடுக்க தம்பி நல்ல கதைக்களம். முதல் பாதியில் ஒரு தந்தையாகவும், ஊர் தலைவனாக இவர் சந்திக்கும் சூழ்நிலைகள் நம்மை கொஞ்சம் பரிதாபப்படவைக்க அடுத்த பாதி இவரா இப்படி என கேள்வி கேட்க வைக்கிறது. எதிர்பார்க்க முடியாத கதை கோணத்தில் ஒரு இடத்தில் சிக்கி விடுகிறார்.

பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகி இப்படத்தில் கார்த்திக்கு சவலாக இருக்கிறார். வாய் பேச முடியாமல், தான் சொல்ல வந்ததை புரியவைக்க முடியாமல் அவர் அவஸ்தை படுவது கார்த்திக்கு கூலான ஸெக்மெண்ட்.

காமெடிக்கு டிவி சானல் பிரபலம் அஸ்வந்த். சரளமாக வாய் பேசி, வரும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். அன்சல் பால், பாலா, பாலா சிங், இளவரசு, குட்டி ஜோதிகாவாக அம்மு அபிராமி என பலர் இப்படத்தில் கலக்கியிருக்கிறார்கள்.

திரிஷ்யம் படத்தை தொடர்ந்து தமிழில் பாபநாசம் படமாக ரீமேக் செய்து வெற்றியை பதிவு செய்தவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். தம்பி படத்தை எளிதில் ரசிகர்களால் கண்டுபிடிக்க முடியாதபடி கதைக்களத்தை நகர்த்தியுள்ளார். வீட்டில் அக்கா இருந்தால் இன்னொரு அம்மாவுக்குச் சமம் என சொல்லும் வசனம் பளிச்!

திரைக்கதை, மலையாள படங்களுக்கே உரிய ஸ்டைல் என்று சொல்லலாம். இருப்பினும் முதல் பாதி சற்று மெல்லச் செல்வது போல இருந்தாலும் அடுத்தடுத்து ட்விஸ்ட் கொடுத்து சூடுபிடிக்க வைக்கிறார். இசையும் மிக எளிமையாக உள்ளது.

பார்க்கலாம்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *