ஒலிம்பிக் போட்டில் ஒரு தங்கம் வென்று வந்ததை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில், தேசிய அளவில் பல தங்கப் பதக்கங்களை வென்ற சிறுமி ஒருவரைக் காது கேளாருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற அனுப்பாத அரசுகளுக்கு நீதிமன்றம் செருப்படி கொடுத்து உத்தரவிட்டுள்ளது, அரசுகளின் கையாலாகாத்தனத்தை வெட்ட வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிறுமி சமீஹா பர்வீன். இவர் தம் 6 ஆம் வயதில், தவறானதொரு அறுவை சிகிட்சையால் காது கேட்கும் திறனை இழந்ததோடு வாய்ப் பேசமுடியாதவராகவும் ஆனார்.
ஹோட்டலில் வேலை செய்து பிழைக்கும் தந்தையின் குறைந்த வருமானத்தால் மேற்கொண்டு சிகிச்சை செய்ய வழியில்லாமல், நிரந்தரமாக காது கேளாதவராக ஆனார். படிப்பிலும் விளையாட்டிலும் படு சுட்டியான இவரின் திறமையைக் கண்ட ஆசிரியர்கள், விளையாட்டில் நன்கு ஊக்கப் படுத்தினர்.
மாநில அளவில் மட்டுமின்றி 2017, 2018, 2019 ஆகிய மூன்று தேசிய தடகள போட்டிகளில் பங்குபெற்று நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களிலெல்லாம் தங்கப்பதக்கங்கள் வாங்கி குவித்துள்ளார்.
இந்நிலையில், போலந்து நாட்டில் நடைபெறும் நான்காவது காதுகேளாருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதற்கான தேர்வில் கலந்துகொண்டு தேர்வானார்.
ஆனால், ஒரே ஒரு பெண்தான் தேர்வாகியதால் அனுப்ப முடியாது என தேசிய விளையாட்டு ஆணையம் அவரைப் புறக்கணித்துள்ளது. தகுதியிருந்தும் இவரைப் புறக்கணித்ததைப் பற்றிய விவரத்தைக் கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கவனத்துக்கு எடுத்துச் சென்றார்.
போலந்துக்குச் செல்லும் குழுவில் இவரை இடம்பெற வைக்க அவர் உறுதியளித்திருந்த நிலையில், தற்போது வெறும் ஐந்து ஆண்களை மட்டும் கொண்டு போலந்துக்கு இந்திய விளையாட்டுக் குழு சென்றுள்ளது. ஒலிம்பிக்கில் இடம்பெற முழு தகுதியிருந்தும் பெண் என்ற ஒரே காரணத்துக்காக புறக்கணிக்கப்பட்ட இவருக்கு நீதி கேட்டு எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல்கொடுத்தும் எவரின் குரலுக்கும் இந்திய விளையாட்டு ஆணையம் செவிசாய்க்கவில்லை.
தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நியாயம் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தை சமீஹா பர்வீன் அணுகியுள்ளார். இதனை அவசர வழக்காக எடுத்து பதிவு செய்த நீதிமன்றம், நாளைக்குள் உரிய பதிலைத் தரவில்லை எனில் நீதிமன்றமே நேரடியாக உத்தரவிடும் என அரசுக்கு எச்சரிக்கை செய்து வழக்கை (13/08/2021) நாளைக்குத் தள்ளி வைத்துள்ளது.
இவ்விவகாரம் இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஆகியவற்றின் கையாலாகாத்தனங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இதுவரை கலந்துகொண்ட தேசிய அளவிலுள்ள போட்டிகளிலெல்லாம் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டிலிருந்து செல்லும் விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்பட்ட விசயம் தொடர்பாக சமீஹாவின் தாயார் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மீது பல்வேறு புகார்களை அடுக்கியுள்ளார். தமிழக அரசும் இவ்விசயத்தை இதுவரை பெரிதாக கண்டுகொண்டது போல் தெரியவில்லை.
தற்போது போலந்தில் நடக்கும் காதுகேளாருக்கோன ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக வெறும் 5 ஆண்களே அனுப்பப்பட்டுள்ளனர்.
2017 ல் நடந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பாக, 27 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் உட்பட மொத்தம் 46 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
2019 ல் நடந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பாக, 7 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உட்பட 12 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
2021, வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடக்கும் ஒலிம்பிக்ஸில் வெறும் 5 ஆண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியா சார்பாக எவருமே அனுப்பப்பட மாட்டார்களோ என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.
தற்போது நடக்க இருக்கும் போட்டிக்காக இந்தியா சார்பாக கலந்துகொள்ள இரு பெண்களை மட்டுமே தேர்வுக்குழு தேர்வுக்காக அழைத்துள்ளது. இதில், சமீஹா மட்டும் எல்லா பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஒரே ஒரு பெண்ணை மட்டும் செலவு செய்து அனுப்பமுடியாது என தேர்வாணையம் கைவிரித்துள்ளது.
இதனை அறிந்த சமீஹாவின் ஊர் பொதுமக்கள், அவர் போலந்து செல்வதற்கான முழு தொகையையும் தாங்கள் சேகரித்து தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இவை எதையுமே காதில் போட்டு கொள்ளும் நிலையில் விளையாட்டு ஆணையமோ அரசுகளோ இல்லை. அவர்களுக்கு வேறு நிறைய வேலைகள் உள்ளன.
இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர வைக்கும் அளவுக்குத் திறமையான சமீஹாக்கள், தங்கள் உடல் குறைபாடுகளையும் மீறி உயர்ந்து நிற்கும்போது அதனைச் சரியான முறையில் பயன்படுத்த முன்வராத அரசியல், அதிகார வர்க்கங்களின் கையாலாகாத்தனம் இந்தியாவின் மாபெரும் சாபக்கேடு!