திருப்பூர் (30 செப் 2020): திருப்பூர் அருகே படிக்கச் சொல்லி படிக்கச் சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் 10 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் விளையாட்டு புத்தி கொண்ட 10ஆம் வகுப்பு மாணவரைப் பாடம் படிக்கச் சொல்லிப் பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான குறிப்பிட்ட மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர், அவினாசி பிஎஸ் சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். வயது 45. பொதுத் துறை வங்கி ஒன்றில் காவலராக பணிபுரிகிறார். மனைவி பிரதிபா. வயது 39. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் சஞ்சய். வயது 15. 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சஞ்சய் ஆன்லைன் வகுப்புகளில் கவனம் இன்றி செல்போனில் விளையாடுவது, வெளியில் நண்பர்களுடன் அரட்டையடிப்பது, ஊர் சுற்றுவது என இருந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் தமிழ்நாட்டில் பள்ளிகள் வரும் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகச் செந்தில் நாதன்-பிரதிபா தம்பதியினர் சஞ்சயைப் பாடங்களைப் படிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாக சஞ்சய் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்துள்ளார்.
இந்நிலையில் சஞ்சய் தனது பெற்றோரும் சகோதரர்களும் வீட்டில் இல்லாத நிலையில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.