ஐதராபாத் (19 டிச 2022): தெலுங்கானா மாநில காங்கிரசில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியின் 13 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், மற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ராஜினாமா செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏ தனாசாரி அனுசுயா, முன்னாள் எம்எல்ஏ வேம் நரேந்திர ரெட்டி ஆகியோர் ராஜினாமா செய்தவர்களில் அடங்குவர்.
ராஜினாமா கடிதத்தில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மாநிலத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கே.சி.ஆரை வீழ்த்த வலுவான போராட்டம் தேவை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ராஜினாமா செய்த உறுப்பினர்களில் தெலுங்கானா எம்எல்ஏ சீதகாவும் ஒருவர்.
புதிய காங்கிரஸ் உறுப்பினர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த தலைவர்கள் என கூறப்படுகிறது.
புதியவர்களுக்கு பதவி அளிப்பது கடந்த 6 ஆண்டுகளாக காங்கிரசுக்காக உழைத்த தலைவர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.