சென்னை (20 அக் 2022): சமூக வலைதளங்கள் மட்டும் அப்போதே இருந்திருந்தால் தான் முதல்வர் ஆகியிருப்பேன் என்று பேசியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார், இன்னும் 15 நாட்களில் மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் திபாவளி பரிசுகளை கட்சினருக்கு கட்சி தலைவர் சரத்குமார் வழங்கினார். இதை தொடர்ந்து பேசிய சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சினர் அரசியல் மட்டும் இல்லாமல் ஆன்மீகத்தையும் பேசுகின்றார்கள். சமத்துவ மக்கள் கட்சி 15ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருவதே பெரிய சாதனைதான் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசியலுக்கு வருவது பணம் சம்பாதிப்பது அல்ல மக்களுக்கு சேவை செய்வது என நிர்வாகிகள் அறியவேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு கொண்டு தான் இருக்கின்றோம். நான் அன்றைய காலத்தில் மக்களுக்கு செய்த உதவிகளை சமூகவலைதளங்கள் இருந்து இருந்தால் முதல்வராக ஆகியிருப்பேன்.இன்னும் 15நாட்களில் மிக பெரிய அறிவிப்பு வரும். அதனை அறிவிப்பேன்” என கூறினார்.
“ சமத்துவம் தான் முக்கியம் எல்லோர் கையிலும் கீறினால் ரத்தம் தான் வரும் நான் பள்ளி படிக்க சேர்க்கும் போது எனது அப்பா மனித சாதி என எழுதி அனுப்பினார்” என்று கூறிய சரத்குமார், நமது நாடு முன்னேற்றம் அடையை பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பாதிப்புக்களை முன்பே தடுக்க வேண்டுமே தவிர பின்னோக்கி சென்று என்ன என்று ஆராய்ச்சி செய்வது தேவையில்லாதது எனவும் தெரிவித்தார்.