திருச்சி (17 ஏப் 2020): கொரோனா சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியவர் திருச்சியில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 13,430 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 448 பேர் உயிரிழந்துள்ளனர். 1768 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப் படாவிட்டாலும், சந்தேகத்தின் பேரில் தனிமைப் படுத்தப்பட்ட பலரும் வீடு திரும்பிக் கொண்டு உள்ளனர். அதில் திருச்சியை சேர்ந்த 68 வயது முதியவர் 14 நாள் தனிமைப் படுத்தலுக்குப் பிறகு நேற்று வீடு திரும்பினார். அவர் கொரோனா தனிமைபடுத்தல் கேம்பில் எவ்வாறு நடத்தப்பட்டார்? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“நான் கடந்த 15 நாட்களுக்கு முன் அரசின் உத்தரவின் பேரில் நானாகவே மருத்துவமனையை நாடி என்னை தனிமைப்படுத்தும்படி கோரினேன். அதனடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட எனக்கு இரண்டு முறை கொரோனா சோதனை செய்யப்பட்டது. இரண்டு சோதனைகளிலும் கொரோனா பாதிப்பு இல்லை என வந்தது. எனினும் விதிப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று வீடு திரும்புகிறேன்.
கொரோனா கேம்பில் இருந்த நாட்களில் நானும் என்னை சேர்ந்தவர்களும் கன்னியமாக நடத்தப்பட்டோம், தினமும் மருந்துகள் கொடுக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடத்தப்பட்டோம். மேலும் எங்களை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள், பலமுறை திருச்சி மாவட்ட ஆட்சியர் எங்களை தொடர்பு கொண்டு விசாரித்து வந்தார்.” என்றார்.
மேலும் “பொதுமக்கள் அரசின் உத்தரவை மதித்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் மிகவும் நல்லது” என்றார்.