சென்னை (07 மே 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இது தமிழகத்திலும் அதன் வீரியத்தை காட்டி வருகிறது.
இந்நிலையில் புதன் கிழமை மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 771 பேரில் 575 பேர் ஆண்கள், 196 பேர் பெண்கள் ஆவர்.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்த அளவில் 3,320 ஆண்கள், 1,507 பெண்கள்,2 திருநங்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்று 13,413 மாதிரிகளை சேர்த்து மொத்தம் தமிழகத்தில் 1,88,241 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக 16 தனியார் ஆய்வகங்கள், 36 அரசு ஆய்வகங்கள் என மொத்தம் 52 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.
வழக்கமாக டிஸ்சார்ஜுகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும் நிலையில் இன்று 31 பேர் மட்டுமே டிஸ் சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் 1,516 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று 2 பேர் உள்பட மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த அளவில் சென்னையில்தான் அதிக பாதிப்பு காணப்படுகிறது. இங்கு இன்று 324 பேர் உள்பட மொத்தம் 2,328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.