திருச்சி (05 ஜூன் 2021); சிக்ஜில் என்ற நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள 80 டன் ஆக்சிஜன், இன்று (05.06.2021) ரயில் மூலம் திருச்சி வந்து சேர்ந்தது.
இதில் 16 டன் தாங்கக்கூடிய லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது. இதனைப் பார்வையிட்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, “தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இல்லை. இருப்பினும் கையிருப்பு வைத்துக்கொள்வதற்காக இவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது அலை வந்தாலும் அதை தமிழ்நாடு சமாளிப்பதற்குத் தயார் நிலையில் உள்ளது. திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை நோய் தாக்கம் அதிகளவில் குறைந்துவருவதாகவும், படுக்கைகள் காலியாக உள்ள நிலையில் தொடர்ந்து கரோனாவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், சிகிச்சை குறித்து கேட்டறிந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, திருச்சி மாநகர பொறுப்பாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், வணிகவரித்துறை அதிகாரிகள் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.