ஸ்ரீவில்லிபுத்தூர் (25 ஜன 2020): சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் என்று அதிமுகவின் பால்வளத்துறை ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்தால், அதிமுக தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், `ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு போட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால், மீதமுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.
சிறையில் இருக்கும் சசிகலா கணவர் நடராஜன் மறைவுக்காக மட்டும் பரோலில் வெளியே வந்தார். பின்பு அவர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுகவின் பால்வளத்துறை ராஜேந்திர பாலாஜி சசிகலா விரைவில் வெளியே வரவேண்டும் என பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “விரைவில் சசிகலா விடுதலையாக பிராத்திக்கிறேன். அவர் சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது, அவர் வெளியே வந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக அதிமுக அமைச்சர்கள் ஆளாளுக்கு வெவ்வேறு விதமாக கருத்துக்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத் தக்கது.