புதுடெல்லி (12 செப் 2020): விமானத்திற்குள், புகைப்படம், வீடியோ எடுக்கப்பட்டால் விமானம் அந்த வழித்தடத்தில் பறக்க இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
சண்டிகரில் இருந்து மும்பை வந்த தனியார் விமானத்தில் நடிகை கங்கனா ரணாவத் பயணம் செய்தார். அப்போது, மீடியாவை சேர்ந்தவர்கள், வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், “விதிமுறைகளை மீறி யாரேனும் விமானத்திற்குள் புகைப்படம், வீடியோ எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த விமானம், அந்த குறிப்பிட்ட வழித்தடத்தில் இரு வாரங்கள் பறக்க தடை விதிக்கப்படும்.விமான விதி 1937, விதி 13ன் யின் கீழ் விமானத்தில் பயணிக்கும் எந்த பயணியும் விமானத்திற்குள் புகைப்படம் எடுக்கக்கூடாது.” என்று கூறப்பட்டுள்ளது.