குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி!

Share this News:

சென்னை (25 ஜன 2020): கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பிஎஸ்.சி குரூப் -4 தேர்வில் முறைகேடு நடந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த அதிர்ச்சியாக, இந்தாண்டு காவலர் உதவி ஆய்வாளர்களுக்காக தேர்விலும் முறைகேடு நடந்தாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள தாலுக்கா உதவி ஆய்வாளர், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 1905 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது

தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியத்தின் சார்பில் தேர்வு விண்ணப்பம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விநியோகம் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் ஜனவரி 11-ம் தேதி காவல்துறையினர்களுக்கான ஒதுக்கீட்டிற்கான தேர்வும்,13 ஆம் தேதி பொதுப்பிரிவினர்களுக்குமான தேர்வும் தனித்தனியாக நடைபெற்றது

இந்தத் தேர்வில் குறிப்பிட்ட பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் தேர்வு பெறும் விதமாக முறைகேடு நடந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கடிதங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பி வருகின்றனஇந்தக் கடிதங்கள், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவி்ற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன

பெயர் குறிப்பிடப்படாத அந்த புகார் கடிதத்தில் வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டில் சிகரம் தொடு என்ற பெயரில் காவலர் தேர்வுகளுக்காக பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது

கடந்த 20-ம் தேதி அந்த பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த போதுதான் நடந்து முடிந்த காவலர் தேர்வு பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

பயிற்சிப் பள்ளி இயக்குநர் செல்வம், தனது பயிற்சிப் பள்ளியில் பயின்ற மாணவர்கள், சமீபத்தில் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் 70க்கும் மேற்பட்டோர் கண்டிப்பாக 110 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பார்கள் என்று கூறியதாகவும் அதற்கான வழிகளை தாங்கள் செய்து கொடுத்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜனவரி 13-ம் தேதி நடந்து முடிந்த தேர்வில் அந்த பயிற்சிப் பள்ளியில் படித்த 70 மாணவர்களுக்கு தேர்வுக்கு முதல் நாளே 170 மதிப்பெண்களுக்கான மொத்த கேள்விகளில் 130 மதிப்பெண்களுக்குரிய கேள்விகளுக்கான விடைகள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது

மேலும் சென்னை, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு ஆகிய மையங்களில் காவலர் ஒதுக்கீட்டுக்காக நடைபெற்ற தேர்வுகளில் செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தேர்வு தாளை மாற்றி முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது

மேலும் தேர்வு மேற்பார்வையாளராக முதல்நிலை தலைமைக் காவலரை நியமித்ததும் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

பகீர் குற்றச்சாட்டுகளை அடுத்து, தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட சிகரம் தொடு பயிற்சிப் பள்ளியின் இயக்குநர் செல்வத்திடம் கேட்டபோது, காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்ப் புகார்கள் பரப்பப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார்

இன்னும் என்னென்ன பூதமெல்லாம் வெளிவரப்போகிறதோ என பரபரப்பு நிலவுகிறது.


Share this News:

Leave a Reply