சென்னை (06 பிப் 2023): முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்காக விமர்சனங்களைச் சந்தித்த பாஜக முன்னாள் நிர்வாகி லட்சுமணச்சந்திரா விக்டோரியா கவுரி, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
ஆர்எஸ்எஸ் ஊதுகுழலான பாஜக மகிளா மோர்ச்சா தலைவராக இருந்த விக்டோரியா கவுரி. கிறிஸ்தவத்திற்கு எதிரான கட்டுரை எழுதியதற்காக விமர்சிக்கப்பட்டார். மேலும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசியதால் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் இவரை நீதிபதியாக பரிந்துரைத்துள்ள நிலையில் கொலிஜியம் பரிந்துரைக்கு எதிரான மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஆனால் அதற்குள் ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமனம் செய்துள்ளது.
இது போன்ற நியமனங்கள் நீதித்துறையின் சுதந்திரத்தை குழிபறிக்கும் என்று கவலை தெரிவித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் மற்றும் ஜனாதிபதிக்கு வழக்கறிஞர்கள் குழு கடிதம் எழுதியிருந்தது.
தொடர்ந்து வெறுப்புப் பேச்சுக்களை வெளியிடும் ஒருவரை நீதிபதியாக நியமிப்பது நீதித்துறையின் நடுநிலைமையை சீர்குலைக்கும் என்றும் அவரை நீதிபதியாக்கும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விக்டோரியா கவுரியின் நிலைப்பாடு அரசியல் சாசன மதிப்புகளுக்கு ஒத்துவராது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் சில வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மனு வெள்ளிக்கிழமை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.