சென்னை (18 ஏப் 2020): “கொரோனா குறித்து எதிர்கட்சிகளுடன் விவாதிக்க எதிர் கட்சி தலைவர்கள் என்ன மருத்துவர்களா?” என்ற முதல்வர் எடப்பாடியின் கருத்துக்கு பாஜக கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடிக்குக் கோரிக்கை வைத்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தக் கோரிக்கையை நிராகரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மருத்துவ ஆலோசனை பெற எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா? கரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன” எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்
எடப்பாடியின் கோபாவேசம் எதிர்க்கட்சிகளைக் கொந்தளிக்க வைத்திருப்பதுடன், எடப்பாடியைக் கண்டித்தும் வருகின்றன. இந்த விவகாரத்தில் எடப்பாடிக்கு எதிராகத் தமிழக பாஜகவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் எடப்பாடியின் பேச்சை அப்படியே ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து, பாஜகவின் தேசிய தலைவர் நட்டாவுக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன்.
மேலும் “எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா? என முதலமைச்சர் எடப்பாடி கேட்பது பொறுப்பான முதல்வர் பதவிக்கு அழகல்ல” என்றும் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
மேலும் மிகக் கொடிய ஒரு பிரச்சனையில் தேசமே ஒருங்கிணைந்து போராடி வரும் நிலையில் எடப்பாடியின் பேச்சு பொறுப்பற்றத்தனமாக இருக்கிறது. இரு கைகளும் தட்டினால்தான் ஓசை வரும். ஒரு கை தட்டுவது எதற்கும் பிரயோஜனமாகாது. ஆளும் கட்சி ஒரு கை எனில், எதிர்க்கட்சிகள் மற்றொரு கை! அந்த வகையில், கரோனா விவகாரத்தில் இரு தரப்பின் ஆலோசனைகளும் விவாதங்களும் முக்கியமானது. கரோனாவைத் தடுப்பதில் மருத்துவம் சார்ந்த யோசனைகளை டாக்டர்கள் தெரிவிப்பார்கள்.
ஆனால், பிரச்சனைகள் சார்ந்த யோசனைகளை அரசியல் கட்சிகளால் தான் தெரிவிக்க முடியும். குறிப்பாக, எதிர்க்கட்சிகள்தான் விவரிக்க முடியும். பிரச்சனைகள் என்னவென்றே தெரியாமலும் அல்லது தெரிந்துகொள்ள மறுப்பதும் ஆளும் கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல !
பிரதமர் மோடியே, அனைத்து மாநில முதல்வர்களிடமும் விவாதித்தார். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடமும் மூத்த அரசியல் தலைவர்களிடமும் ஆலோசித்தார் பிரதமர். இவர்களெல்லாம் டாக்டர்களா? ஏன், தமிழகத்தில் உங்களிடமும் (எடப்பாடி) , எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடமும் பேசினாரே! நீங்களெல்லாம் மருத்துவர்கள் என நினைத்தா விவாதித்தார்? இல்லையே! ஒரு முக்கியப் பிரச்சனையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும், அரசுக்குத் தெரியாத விசயங்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து கிடைக்கும் என்பதற்காகவும் தான் விவாதித்தார். “என்று தெரிவித்துள்ளார் நரசிம்மன்.