மசூதிகளில் நோன்பு கஞ்சி விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் – காதர் மொய்தீன் கோரிக்கை!

Share this News:

சென்னை (18 ஏப் 2020): மசூதிகளில் ரமலான் நோன்பு கஞ்சி விநியோகிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளித்து வருகின்றோம்.முஸ்லிம்கள் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதம் ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் நோன்பிருந்து இறைவனை வழங்கி வழிபட்டு, இல்லாதோருக்கு ‘ஜகாத்’ எனும் ஏழை வரி வழங்கி வருகின்றனர்.

இவ்வருட ரமலான் நோன்பு எதிர் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி துவங்குகின்றது. கொரோனா தடுப்பு ஊரடங்கு நடைமுறைகளை ரமலான் நோன்பு காலங்களிலும் அரசின் நடவடிக்கைகளின்படி, மார்க்க அறிஞர்கள் கூறி வரும் வழிமுறைகளை முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து பின்பற்றிட மீண்டும் வலியுறுத்துகிறோம். நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு பன்னெடுங்காலமாக தமிழ்நாடு அரசு பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்கி வருகின்றது. நோன்பிருப்பவர்கள் பள்ளிவாசல்களில் வழங்கும் கஞ்சியை பருகியே நோன்பை திறக்கின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கும், அதை மக்களுக்கு வழங்குவதற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கிடுமாறும், கஞ்சிக்கான பச்சரிசியை வழக்கம்போல் இவ்வருடமும் அரசு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply