சென்னை (27 நவ 2022): பாஜ பெண் நிர்வாகி டெய்சி, திருச்சி சூர்யா ஆகியோர் பேசிய ஆபாச ஆடியோக்களை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கலாம் என்கிற தகவல் பாஜக மூத்த தலைவர்கள அதிர வைத்துள்ளது.
பாஜக சிறுபான்மையின பெண் நிர்வாகி டெய்சி சரண், ஓபிசி அணி மாநில நிர்வாகி திருச்சி சூர்யா ஆகியோர் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தி டெல்லி மேலிடம் உத்தரவிட்டது. இதனால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் ஆபாசமாக பேசிய திருச்சி சூர்யா மன்னிப்பு கேட்டார். இருவரும் அக்கா-தம்பியாகவே இருக்கிறோம். எங்களுக்குள் இனி மோதல் வராது. சமரசமாக செல்கிறோம் என்று கூறிவிட்டு சென்றனர். அப்போது, பேட்டியளித்த டெய்சி, ‘15 நாட்களுக்கு முன்னரே இந்த பிரச்னை குறித்த ஆடியோவை தலைமையிடம் கொடுத்ததாகவும், அப்போது இருவரையும் அழைத்து சுமுகமாக பேசி முடித்து விட்டதாகவும். இப்போது எப்படி ஆடியோ வெளியாகி மீண்டும் பிரச்னை பூதாகரமாகியது தெரியவில்லை’ என்று தெரிவித்தார். ஆனால், இதை மறுத்த அண்ணாமலையின் வலதுகரமான அமர்பிரசாத் ரெட்டி, ‘டெய்சி புகார் கொடுத்தார்.
ஆனால் விசாரணைக்கு திருச்சி சூர்யா வரவில்லை’ என்று தெரிவித்தார். இருவரும் மாறி மாறி கூறியதால், உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல், மூத்த தலைவர்கள் விசாரிக்க ஆரம்பித்தனர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்ததாக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அண்ணாமலைக்கு மூத்த நிர்வாகிகள் யாரையுமே பிடிக்கவில்லை. எல்லாரையும் ஓரம் கட்டி வருகிறார். அதில், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் மட்டுமின்றி கருப்பு முருகானந்தம், வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நிர்வாகிகளையும் தனக்கு போட்டியாகவே கருதுகிறார்.
பாஜகவில் தன்னை மட்டுமே ஹீரோவாக ஆடையாளம் காட்டி வருகிறார். இதனால்தான் அவரது கூட்டத்துக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்து கூட்டம் கூட்டுகிறார். மற்ற தலைவர்களின் கூட்டத்துக்கு 50 பேரை தாண்டினாலே அதிசயம் என்ற நிலைதான் உள்ளது. போஸ்டர்களில் கூட தலைவர்களின் படங்கள் இருக்கக் கூடாது என்று கருதுகிறார்.
திருச்சி பகுதியில் கருப்பு முருகானந்தத்தின் படத்தை பெரிதாக போட்டு டெய்சி போஸ்டர் அடித்துள்ளார். இதை பல முறை அண்ணாமலை நிர்வாகிகள் மூலம் டெய்சியிடம் தெரியப்படுத்தினார். கேட்கவில்லை. இதனால் பல முறை திருச்சி சூர்யாவும் இதை கண்டித்ததோடு தன் படத்தையும் போட வேண்டும் என்று கூறி வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் சில மாதங்களாகவே புகைச்சல் இருந்து வந்தது. இந்தநிலையில்தான் அவர் திடீரென திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மை பிரிவில் நிர்வாகி ஒருவரை தன்னை கேட்காமல் எப்படி நியமிக்கலாம் என்று டெய்சியிடம் கேட்டுள்ளார். இதில்தான் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருமையிலும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். டெய்சியும் பதிலுக்கு சூர்யாவின் அம்மா, மனைவியையும் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்துள்ளார். இந்த ஆடியோவை டெய்சிதான் ரெக்கார்டு செய்துள்ளார்.
பின்னர் இதை புகாராக, மாநில தலைவர் அண்ணாமலை, பொறுப்பாளர் கேசவ விநாயகம், செயலாளர் கரு.நாகராஜன் ஆகிய 3 பேரிடமும் கொடுத்துள்ளார். இந்த 3 பேரிடம் மட்டுமே ஆடியோ இருந்துள்ளது. ஆடியோவில் கேசவ விநாயகத்தைப் பற்றித்தான் வாய் கூசும் அளவுக்கு திட்டியுள்ளார் சூர்யா. இதனால் தன்னை அவமானப்படுத்தும் ஆடியோவை அவர் வெளியிட்டிருக்க முடியாது. இதனால் அண்ணாமலை அல்லது கரு.நாகராஜன் ஆகியோரில் ஒருவர்தான் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆடியோவை வெளியிட்டதன் நோக்கம், சூர்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதல்ல. ஏனெனில் அவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பராகிவிட்டார். கரு.நாகராஜனுக்கும் அவருக்கும் மோதல் இல்லை. அதேநேரத்தில் டெய்சிக்கும் அவர்கள் இருவருக்குமே பிரச்னை இல்லை. இதனால் இந்த ஆடியோவில் கேசவ விநாயகம் மற்றும் டெய்சியை தவறாக இணைத்து சூர்யா பேசியிருப்பார். இதனால் கேசவ விநாயகத்தை சேதப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே ஆடியோ வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக கேசவ விநாயகத்துக்கும், அண்ணாமலைக்கும் மோதல் நீடித்து வந்தது. காயத்ரியை கட்சியை விட்டு நீக்கியதில் கேசவ விநாயகத்துக்கு விருப்பம் இல்லை.
பாஜவில் ஆர்எஸ்எஸ் தலையீட்டை அண்ணாமலை விரும்பவில்லை. நிர்வாகிகள் நியமனத்திலும் இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால் கட்சி அலுவலகத்திலேயே இருக்கும் இடையே அடிக்கடி விவாதமும், வார்த்தை மோதலும் நடந்துள்ளன. இந்தநிலையில் தான் ஆடியோ வெளியானது. இதன் பின்னணியில் அண்ணாமலை உள்ளார் என மூத்த தலைவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்ணாமலை, அண்ணாநகரில் வார் ரூம் என்ற பெயரில் ஒரு அலுவலகம் நடத்தி வருகிறார். இங்குதான் மற்ற கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் இணைய தளம் மூலம் பதில் அளிக்கவும், அடுத்தவர்களை டேமேஜ் செய்யும் பணிகளும் நடக்கின்றன. இந்த வார் ரூமில் இருந்துதான் ஆடியோ வெளியானதாக கூறப்படுகிறது. இதனால்தான் அண்ணாமலை மீது பெரிய அளவில் மூத்த தலைவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.
இதனால் இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், ேஜ.பி.நட்டாவுக்கும் புகார்களை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் மூத்த தலைவர்களிடம் இருந்து பெண் நிர்வாகிகளுக்கும் பரவியுள்ளதால், அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கே.டி.ராகவனின் வீடியோவும் முதலில் அண்ணாமலையிடம்தான் வந்துள்ளது. அவர்தான் வீடியோவை வெளியிடும்படி கூறினார். இதனால்தான் வீடியோ வெளியாகி கே.டி.ராகவன் கட்சிக்குள் வர முடியாமல் தவித்து வந்தார். தற்போது, கேசவ விநாயகத்துக்கு குறி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுவது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.