சென்னை (07 மே 2020): தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா பாதித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது அரசுக்கு சவாலாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லம் அமைந்துள்ளது. முதல்வர் வீட்டு பாதுகாப்பு பிரிவில் சுழற்சி முறையில் ஆண் மற்றும் பெண் போலீசார் பணியில் ஈடுபடுவது வழக்கம். இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்பு பிரிவு பெண் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளது.
இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் சென்று உள்ளார். தற்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.