சென்னை (07 மே 2020): மதுக் கடைகள் திறப்பதை எதிர்த்து பொதுமக்கள்,இன்று, 7ம் தேதி கருப்பு சின்னம் அணிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்’ என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தி.மு.க., தலைவர், ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கொரோனா நோய் தொற்றில் இருந்து, மக்களை காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், நர்ஸ்கள், துாய்மை பணியாளர்கள், போலீஸ் துறையை சேர்ந்தவர்கள் பலரும், சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில், தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கள வீரர்களான அவர்களுக்கு கூட, பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத, தமிழக அரசை கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மீட்பு நடவடிக்கை பற்றி கவலைப்படாமல், மது கடைகளை திறப்பதில் மட்டும், ஆர்வத்துடன் செயல்படும், தமிழக அரசை கண்டிக்கிறோம்.மாநில அரசு கேட்ட நிதியை, மத்திய அரசு வழங்காததையும் கண்டிக்கிறோம். எனவே, மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக, நாளை ஒரு நாள் மட்டும், கருப்பு சின்னம் அணிய வேண்டும்.
காலை, 10:00 மணிக்கு, தமிழக மக்கள், அவரவர் வீட்டின் முன், ஐந்து பேருக்கு அதிகமாகாமல், 15 நிமிடங்கள் நிற்க வேண்டும் .அப்போது, ‘கொரோனாவை ஒழிப்பதில், தோல்வி அடைந்த, அ.தி.மு.க., அரசை கண்டிக்கிறோம்’என, முழக்கமிட்டு, கலைய வேண்டும்.”
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.