சென்னை (01 ஏப் 2020): கொரோனா பரவலை தடுக்க கோவை ஈஷா மைய கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் உரிய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லி மாநாட்டில் பங்கேற்றோர் விவரங்கள் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தெரிவிக்க கோரினோம். தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். அதனால்தான் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டத்தை பொதுமக்கள் மதிக்க வேண்டும்.
கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் ஏற்கெனவே 17 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு என்ன நிலை என்பதை மத்திய அரசு முடிவு செய்யும்.” என்று முதல்வர் கூறினார்.
முன்னதாக சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டாார். அப்போது முதல்வருடன் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.