சென்னை மக்களுக்கு குளு குளு செய்தி!

Share this News:

சென்னை (10 ஜன 2020): சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சாதாரண மக்களும் பயணிக்கின்ற வகையில் குளிர்சாதனப் பேருந்துகள் இன்று (10.01.2020) முதல் இயக்கப்படுகின்றது.

குளிர் சாதனப் பேருந்தினை நேற்று (09.01.2020) தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டனர்.

நவீன முறையில், நல்ல தரத்தில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டு, 40 பயணிகள் அமர்ந்த நிலையிலும், 20 பயணிகள் நின்ற நிலையிலும் பயணம் செய்யலாம். மேலும், பயணிகள் அடுத்த பேருந்து நிறுத்தத்தினை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஏதுவாக ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தக் கட்டணத்தில் பயணிகள் பயணம் செய்திட ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்பேருந்தின் உத்தேச மதிப்பு 36 இலட்சம் ஆகும்.

பேருந்தின் புதிய வடிவிலான இருக்கையில் அமர்ந்து முதல்வரும், துணை முதல்வரும் பார்வையிட்டு சாதாரண மக்களும் பயன் பெறுகின்ற வகையில் நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார்கள்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

சென்னை மாநகர மக்களின் ஆவலை பூர்த்தி செய்கின்ற வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 48 குளிர்சாதனப் பேருந்துகள் தரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை தமிழக முதல்வரும், துணை முதல்வரும், பார்வையிட்டு பாராட்டியுள்ளார்கள். வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, முக்கியமான வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்று (10.01.2020) காலை முதல், வழித்தட எண்.570, கோயம்பேடு முதல் சிறுசேரி வரையில் இயக்கப்படும் இந்த குளிர்சாதனப் பேருந்தில் குறைந்தபட்ச கட்டமணாக ரூ.15/-ம், அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வரையிலான தூரத்திற்கு ரூ.60/- வரையிலான கட்டணமும், வழித்தட எண்.91 தாம்பரம் முதல் திருவான்மியூர் வரையில் இயக்கப்படும் இந்த குளிர்சாதனப் பேருந்தில் குறைந்தபட்சமாக ரூ.15/-ம், அதிகபட்சமாக ரூ.45/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்ட வால்வோ குளிர்சாதனப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.28/- நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூ.15/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், எஞ்சியுள்ள 46 குளிர்சாதனப் பேருந்துகளும் பின்வரும் வழித்தடங்களில் விரையில் இயக்கப்படும். வழித்தட விவரங்கள் பின்வருமாறு:
ஏ1 – சென்னை சென்ட்ரல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். இரயில் நிலையப் பேருந்து நிலையம் முதல் திருவான்மியூர் வரை
19பி – தி.நகர் முதல் கேளம்பாக்கம் / சிறுசேரி வரை
70வி – கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா வரை
102 – பிராட்வே முதல் கேளம்பாக்கம் வரை
95 – கிழக்கு தாம்பரம் முதல் திருவான்மியூர் வரை.

மேற்கண்ட இத்தகவலை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply