சென்னை (11 செப் 2020): தமிழகத்தில் சட்டசபை கூட்டம் கூட உள்ளதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நிறைவடைந்தது. அதற்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபையை மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
14-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.