ஒன்றிய அரசு என அழைக்கலாமா? – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Share this News:

மதுரை (01 ஜூலை 2021): ஒன்றிய அரசு என சொல்வதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது

திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திமுக புதிய அரசாங்க பொறுப்பேற்ற பின்பு இந்திய அரசை “ஒன்றிய அரசு” என்று கூறிவருகிறது மேலும் இவ்வாறு அழைப்பதை ஊக்கப்படுத்துகிறது. ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது. இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிரானது ஆகும். மேலும் இதுபோன்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு பின்புலத்தில் ஏதோ தீவிரவாத சக்தியின் உந்துதல் இருப்பதாக சந்தேகம் எழுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தின்போது ஒன்றியம் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த முதலமைச்சர் “இந்தியா யூனியன் கவர்மெண்ட்” என்று அழைக்கப்படுவதால் அதை நாங்கள் ஒன்றிய அரசு என்று கூறுகின்றோம் இது ஒன்றும் சமூக விரோத குற்றமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இது முற்றிலும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது சட்டமன்றத்தை இந்த அரசு தவறாக வழிநடத்தி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இதேபோல் சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் உரையின் இறுதியில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறவில்லை இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இறையாண்மைக்கு எதிரான கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தலைமை செயலரிடம் மனு அளித்தேன் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும் இந்திய அரசை இந்தியா அல்லது பாரதம் என்றே குறிப்பிட வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திய அரசை இந்தியா அல்லது பாரத் என்றே அழைக்கவேண்டும் ஒன்றியம் என்று அழைக்கக் கூடாது என வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், நீதிமன்றம் இந்தியாவை இந்திய அரசு அல்லது பாரத் என்று அழைப்பதற்கோ, முதலமைச்சரும், அமைச்சர்களும் மற்றவர்களும் ஒன்றிய அரசு என சொல்லாமல் இப்படிதான் பேசவேண்டும் என்றெல்லாம் உத்தரவிடமுடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Share this News:

Leave a Reply