மதுரை (18 ஆக 2020): கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வீதிகளில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மேலும் பிரதான இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி கொண்டாடக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரவர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்து உரிய வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதிப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் ராஜபாளையம் தர்மாபுரத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சிலை வைத்து வழிபட அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
தமிழகத்தில் தினமும் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவும் சூழல் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும்.
கொரோனா தாக்கம் இல்லை என்றால் விநாயகர் சதுர்த்தி நடத்துவதில் நீதிமன்றம் ஏன் தலையிடப் போகிறது? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், மனுதாரர் மனுவை திரும்ப பெறாவிட்டால் அதிக அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.