சென்னை (26 ஜூன் 2020): தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜூன் 30 க்குப் பிறகும் ஊரடங்கு தொடரலாம் என்ற கருத்து நிலவுகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3645 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் 5-வது கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஊரடங்கு முடியும் நிலையில் ஜூலை 31 வரை போக்குவரத்து இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வழக்கமான ரயில் போக்குவரத்து ஆக. 12 வரை கிடையாது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து நிபுணர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.