இம்பால் (26 ஜூன் 2020): மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பமாக தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ.க்கள் நால்வரும், மீண்டும் முதல்வர் பிரேன் சிங்கிற்கே ஆதரவு அளித்துள்ளனர்.
மணிப்பூரில் கடந்த 2017 தேர்தலில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜ கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், பாஜக எம்எல்ஏ.க்கள் மூன்று பேர், என்பிபி கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்கள், எம்எல்ஏ உள்பட 9 பேர் முதல்வர் பிரேன் சிங்குக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடந்த 17ம் தேதி அறிவித்தனர்.
இதையடுத்து, மேகாலயா முதல்வரும் என்பிபி தலைவருமான கோன்ராட் சங்மா, வடகிழக்கு பிராந்திய பாஜ ஒருங்கிணைப்பாளரும் அசாம் அமைச்சருமான ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் 4 அதிருப்தி எம்எல்ஏ.க்களுடன் டெல்லியில் நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தனர். அப்போது, அதிருப்தி எம்எல்ஏ.க்களின் குறைகளை கேட்ட அவர்கள், அவற்றை சரி செய்வதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து, நேற்று மணிப்பூர் திரும்பிய அவர்கள் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவை சந்தித்து ஆதரவு கடிதத்தை அளித்தனர். இதனால், அங்க்கு ஆட்டம் கண்ட பாஜகவின் அரசுக்கு மீண்டும் பலம் கூடியுள்ளது.